உள்ளடக்க விவரம் | |
---|---|
வகுப்பு | பத்தாம் வகுப்பு |
பாடம் | தமிழ் |
இயல் | 1 - அமுத ஊற்று |
பகுதி | 1.1 - அன்னை மொழியை |
கற்பவை கற்றபின்
1
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
1. நற்றிணை
நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல்.
நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.
2. குறுந்தொகை:
நல்ல குறுந்தொகை எனவும் அழைக்கப்படும்.
குறைந்த அடியளவால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆதலால் குறுந்தொகை என அழைக்கப்பட்டது.
3. ஐங்குறுநூறு:
ஐந்திணைகளைப் பாடும் நூல்.
குறுகிய பாடலடிகள் கொண்ட நூல்.
4. பதிற்றுப்பத்து:
சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடியது பதிற்றுப்பத்து.
5. பரிபாடல்:
இது அகம், புறம் சார்ந்த நூல்.
தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.
6. கலித்தொகை:
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல்.
கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை.
‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.
7. அகநானூறு :
அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது.
களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
8. புறநானூறு:
புறம் சார்ந்த நூல். 400 பாடல்களை உடையது.
இது தமிழரின் வரலாற்றுப்பெட்டகம் எனவும் அழைக்கப்படுகிறது
இது பழந்தமிழரின் வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
2
“எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக.வணக்கம்!
தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். தமிழின் பழமையையோ அல்லது அதன் பெருமையையோ வேறு எம்மொழியும் நெருங்கவியலாது. தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ளது. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” மாக்சு முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.
நிறைவாக, தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழர்களாகிய நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க என்றும் பாடுபடுவோம்.
நன்றி!
வணக்கம்!!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்இ) எம் + தமிழ் + நா
குறுவினா
1
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சீவக சிந்தாமணி,
- வளையாபதி,
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
சிறுவினா
1
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?
- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்.
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே
நெடுவினா
1
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அறிமுக உரை :
தாயே! தமிழே! வணக்கம்.
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.
என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
சுந்தரனார் | பெருஞ்சித்தனார் |
---|---|
நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும், | குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே! |
பாரதத்தை முகமாகவும் பிறை போன்ற நெற்றியாகவும், | பழமைக்கும் பழமையானவளே! |
நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும், | பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே! |
தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார். | பாட்டும் தொகையே! கீழ்க்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருஞ்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார். |
நிறைவுரை :
இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளனர்.
கூடுதல் வினா-விடைகள் & குறிப்புகள்
1
இலக்கணக் குறிப்புகள்
பண்புத்தொகைகள்
செந்தமிழ்,
நறுங்கனி,
பேரரசு,
செந்தாமரை
வினையெச்சங்கள்
பாடி,
குடித்து
2
பகுபத உறுப்பிலக்கணம்
முகிழ்த்த (முகிழ்) = முகிழ் + த் + த் + அ
முகிழ் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
குறு வினாக்கள்
1
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை ?
உலகியல் நூறு
கனிச்சாறு
பாவியக்கொத்து
மகபுகுவஞ்சி
நூறாசிரியம்
பள்ளிப் பறவைகள்
எண்சுவை எண்பது
ஆகியன பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
2
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள் யாவை ?
தென்மொழி
தமிழ்ச்சிட்டு
3
வண்டு - தேன், தமிழர் - தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது ?
வண்டு - தேன் :
உள்ளத்தில் கனல் மூள வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுகின்றது.
தமிழர் - தமிழ்ச்சுவை :
தமிழர் செந்தமிழைச் சுவைத்து தமிழின் பெருமையை எங்கும் முழங்குகின்றனர்.
4
“அன்னை மொழியே” என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக.
செந்தமிழே !
மாண்புகழே !
நறுங்கனியே !
எண்தொகையே !
பேரரசே !
நற்கணக்கே !
தென்னன் மகளே !
சிலம்பே !
5
பதினெண் மேற்கணக்கு நூல்கள் எவை ?
எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு.
6
“இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!” - இவ்வடியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?
பாப்பத்து | பத்துப்பாட்டு | 10 |
எண் தொகை | எட்டுத்தொகை | 8 |
நற்கணக்கு | பதினெண்கீழ்க்கணக்கு | 18 |
மொத்த நூல்களின் எண்ணிக்கை | 36 |
சிறு வினாக்கள்
1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக.
பெயர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : துரை. மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி, குஞ்சம்மாள்
இயற்றிய நூல்கள் : கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி.
சிறப்பு : இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.
காலம் : 10.03.1933 முதல் 11.06.1995 வரை