10ம் வகுப்பு தமிழ் அணிகள் இலக்கணம் & சான்றுடன் கூடிய விளக்கம் | 10th Tamil Anigal Ilakkanam

kb-toc

1 : தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக

அணி இலக்கணம்

தன் + குறிப்பு + ஏற்றம் + அணி = தற்குறிப்பேற்ற அணி

செய்யுளில், தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது, கவிஞர் தன் குறிப்பை ஏற்றி கூறுவதாகும்.

சான்று

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரால் என்பனப்போல் மறித்துக் கைகாட்ட

- சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்)

சான்று விளக்கம்

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் என தடுப்பது போல் கை காட்டியது என இளங்கோவடிகள் மேற்கண்ட வரிகளில் குறிப்பிடுகிறார்.

அணிப் பொருத்தம்

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது, மதில்மேல் இருந்த கொடிகள் இயற்கையாக அசைந்தது.

இதனை இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலைசெயயப்படுவான் எனக்கருதி கொடிகள் கையசைத்து மதுரைக்கு வரவேண்டாம் எனக்கூறுவதாக இப்பாடல் வரிகளில் கூறியிருப்பார்.

இயல்பான நிகழ்வுகவிஞர் ஏற்றி கூறிய கருத்து
காற்றில் கொடிகள் அசைந்ததுகோவலனும் கண்ணகியும் மதுரைக்கு என எச்சரிப்பது

இவ்வாறு இயல்பான ஒரு நிகழ்வின் கவிஞர் தன் கருத்தை ஏற்றி கூறியுள்ளதால், இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்ற்று.

2 : தீவக அணி

தீவக அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

தீவகம் + அணி = தீவக அணி

தீவகம் - விளக்கு

அறையொன்றில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கு, அவ்வறையின் பல்வேறு இடங்களில் உள்ள பொருட்களுக்கும் வெளிச்சம் தருவது போல, செய்யுளில் ஓரிடத்தில் அமைந்த ஒரு சொல், பல்வேறு இடங்களுக்கு சென்று பொருந்தி பொருளை விளக்குவது தீவிக அணி எனப்படும்.

சான்று

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசை அனைத்தும், வீரச்சிலைபொழிந்த அம்பும்,
மிசை அனைத்தும் புள் குலமும் வீழ்ந்து.

சான்று விளக்கம்

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன.

அவை சிவந்த அளவில் பகை மன்னர்களின் அகன்ற தோள்கள் சிவந்தன.

வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகள் சிவந்தன.

குருதி பாய்ந்து திசைகள் யாவும் சிவந்தன.

குருதி மேலே வீழ்தலால் பறவை கூட்டங்கள் யாவும் சிவந்தன
என்ற பொருளை மேற்கண்ட பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன.

அணி பொருத்தம்

இப்பாடலில், சேர்ந்தன என்னும் சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள் மற்றும் பறவைகள் ஆகிய அனைத்துடனும் பொருந்தி சிவந்தன என்ற பொருளினை தருவதால் இது தீவக அணி ஆயிற்று.

3 : நிரல்நிறை அணி

நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும், அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.

சான்று :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணி பொருத்தம் :

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது.

எனவே, இக்குறட்பாவில் நிரல்நிறை அணி பயின்று வந்துள்ளது.

4 : தன்மையணி

தன்மையணியைச் சான்றுடன் விளக்குக.

அணி விளக்கம்

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத்தன்மையோடு செய்யுளில் அமைத்துப் பாடுவது தன்மையணி எனப்படும்.

சான்று

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்..... - சிலப்பதிகாரம்

சான்று விளக்கம்

உடல் முழுவதும் துசியும், விரிந்த கருமையான தலைமுடியும், கையில் ஒற்றை சிலம்போடும் வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலே, வைகை நதி பாயும் கூடல்நகர் அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்ட உடன் மன்னன் உயிர் நீத்தான்.

அணி பொருத்தம்

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களை கையாண்டு கூறியுள்ளமையால், இது தன்மையணி ஆயிற்று.

5 : உவமை அணி

உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

சான்று

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

( திருக்குறள் )

சான்று விளக்கம்

ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது.

அணி பொருத்தம்
உவமை

ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வது

உவமேயம்

ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது

உவம உருபு

போலும்

இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு போலும் வெளிப்படையாக வந்துள்ளது.

எனவே, இது உவமை அணி ஆயிற்று.

6 : எடுத்துக்காட்டு உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில், உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

சான்று :

பண்என்னாம் பாடற் கிளைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இலாத கண்

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

பாடலோடு பொருந்தவில்லையேல் இசையால் என்ன பயன் ? அதுபோல, இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன் ? என திருவள்ளுவர் கூறுகிறார்.

அணி பொருத்தம் :
உவமைபாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
உவமேயம்

இரக்கம் இல்லாத கண்களால் என்ன பயன்

உவம உருபு(அதுபோல) மறைந்து வந்துள்ளது

இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு அதுபோல மறைந்து வந்துள்ளது.

எனவே, இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று.

7 : சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் :

செய்யுளில், முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

சான்று :

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.

( திருக்குறள் )

சான்று விளக்கம் :

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

அணி பொருத்தம் :

இக்குறட்ட்பாவில், " பொருள் " என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து " செல்வம் " என்ற ஒரே பொருளை தருகிறது.

எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.

Previous Post Next Post